Sunday, December 20, 2009

என்னை கண்கலங்க வைத்த கதைகள்.....3

மருத்துவ போராளி எழுத்தாளரான தூயவனின் கதைகள் தனி புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மருத்துவ போராளியான தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் யாழ்ப்பானத்தில் சமாதான காலத்தில் தங்கியிருந்த தூயவனின் கதைகள் போராட்டம் பற்றிய பல நிகழ்வுகளை, உயர்ந்த இலக்கிய தரத்தில் பதிவு செய்துள்ளன.


இயற்கை விதிகள்

-தூயவன்-

குடாரப்பு மணற்பிரதேசம் சூடேறிக்கொண்டிருக்கின்றது. போர் வெம்மையுடன் ஒப்பிடுகையில் அது இதமானதாகவே இருக்கின்றது. ஆனையிறவைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயமாக மேற்கொள்ளப்பட்டதுவே இத்தரையிறக்க முற்றுகை. இதனை முறியடிக்க எதிரி மூர்க்கமாக முயன்றுகொண்டிருக்கிறான். ஆயிரத்தையெட்டியிருந்த போராளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைவடையத் தொடங்கிவிட்டது. சற்று முன்னர் எதிரி மேற்கொண்ட தாக்குதலில் சிலர் வீரச்சாவடைந்துவிட்டனர். காயமுற்றவர்கள் அவசர உயிர்காப்புச்சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்தளம் அனுப்பப்பட்டு விட்டனர். அடுத்துவரப்போகும் சமரை எதிர்பார்த்து கள மருத்துவப்போராளிகள் மீளொழுங்கினைச் செய்து முடித்திருந்தனர். பனை வடலிகளுக்கிடையில் எலிவளைகள் போல் அமைக்கப்பட்டிருக்கும் பதுங்ககழிகள் தான் அவர்களின் மருத்துவப்பாதுகாப்பிடம்.

பனைவடலி நிழலில் நீட்டிக்கொண்டிருக்கும் கருக்குமட்டைகள் வெட்டாமல் மண்மூடையொன்றில் சாவகாசமாகச் சாய்ந்திருக்கிறாள் விடுதலைப்புலிகளின் பெண் இராணுவ மருத்துவர் வளர்மதி. அருகிருக்கும் இசையரசியைப்பார்த்து சொல்கிறாள். 'மருந்துகள் கொஞ்சம்தானிருக்கு, இரத்தமும் வந்து சேரவில்லை" களைப்பைப்போக்க கண்களைமூடித்தியானம் செய்வதுபோல் மௌனமாக இருந்தவள் கண்களைத்திறந்து 'அதற்கு என்ன? என்பதுபோல் பாவனையில் கேட்கிறாள். 'அதுக்கில்ல..... இப்ப கடுமையாக யாரும் காயப்பட்டு வந்தால் என்ன செய்யிறது?" இவளது இடக்கான கேள்வியைப் புரிந்தவள் புன்முறுவலுடன் சிறிது இடைவெளிவிட்டுக் கதைக்கிறாள். 'சரி...நான் கேட்கிறதற்கு பதில் சொல்லு! அதிக ரத்தம் வெளியேறும் போது உடலின் தற்காப்பு பொறிமுறை எவ்வாறு இயங்கும்?" 'மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய அங்கங்கள் இறுதிவரை பாதுகாக்கப்படுவதற்கு ஏனைய அங்கங்களுக்கான இரத்த விநியோகம் குறைக்கப்பட்டு திசைதிருப்பப்படும்." 'அப்படித்தான் இயற்கைவிதிகள் இயக்கத்திற்கும் பொருந்தும்." என உரையாடலை முடிவிற்கு கொண்டு வருகின்றாள் வளர்மதி. 'நித்திரை கொள்ள வேண்டிய நேரத்தில் கதைக்கிறோம் போல் இருக்கிறது" எனக்கூறியவாறு மீண்டும் கண்களை மூடுகின்றாள்.

அப்பொழுது எதிரி எறிகணை ஏவும் சத்தமும் டாங்கிகள் உறுமும் சத்தமும் கேட்கத்தொடங்குகின்றது. 'மீண்டும் தொடங்கிட்டான், ஒருகை பார்க்கிறது எண்டுதான் நிக்கிறாங்கள்" கூறியபடி பதுங்ககழிகனுள் புகுந்து கொள்கிறார்கள். எறிகணைகள் சரமாரியாக இவர்கள் பகுதிகளில் வீழ்ந்து படீர் படீர் என வெடிக்கின்றது. மேலால் வந்துவிழும் எறிகனைகளும் கிடையாக வந்து தாக்கும் டாங்கியின் எரிதணல்களும் பனை மரங்களைப் பொச்சுகளாகப்பிய்த்து எறிகின்றன. காய்ந்த ஓலைகள் நிறைந்திருந்த பனைமரங்களும் சிறு பற்றைகளும் பற்றி எரிகின்றன. கடந்த சில நாட்களாக இவ்விகாரமான போர் அகோரத்திற்கு பழக்கப்பட்டிருந்தார்கள். அப்பொழுது தொலைத்தொடர்பு கருவியில் அறிவித்தல் வருகின்றது. எதிரி முன்னேற முற்படும் பகுதியில் கடமையாற்றிய களமருத்துவப்போராளி இறந்து விட்டதாகவும், இன்னொருவரை அங்கு அனுப்பும்படியும் 'களமருத்துவர்களின் எண்ணிக்கை வீதம் கைமீறிக் குறைந்துவிட்டது. எனினும் ஒன்றும் செய்யமுடியாது. உடனடியாக இசையரசி தனது களமருத்துவப்பையையும் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றாள். எறிகணைச்சிதறல்கள் படாமல் சமர் நடைபெறும் இடம் சேர்வது என்பது அவளுடைய அதிஸ்டத்துடன் தொடர்புடையது.

மகளீர் படையணியும் எதிரியும் கைகலப்பில் ஈடுபடும் தூரத்தில் துப்பாக்கிச் சமர்புரிகின்றனர். பகைவன் அடிவாங்கிப் பின்வாங்குகையில் இவர்கள்மீது எரிதணல் பொழியும். இவர்கள் அதற்கு நிலையெடுக்க எறிகனை வீச்சு இவர்களின் சுற்றயல் நோக்கி நகரும். எதிரி நேராக இவர்களுள்ள இடத்திற்குள் உட்புகமுனைவான். மீண்டும் இருபகுதியினரும் நேருக்குநேர் அடிபடுவார்கள். இறப்புக்கள் அதிகரிக்கும் மீண்டும் பின்வாங்குதல் மீண்டும் முன்னேறுதல் என நிகழ்வுகள் தொடர களமுனை எறிகணைச் சிதறல்ளாலும், வெற்றுக்கோதுகளாலும் நிறையும், காயமடைந்தவர் குரல்களால் களம் மேலும் விகாரமடையும். சமரின் உச்சக்கட்டத்தில் சமர்முனையின் மகளீர் தளபதி வயிற்றில் காயமடைந்து விழுகின்றாள். பாரிய இரத்தப்பெருக்கு ஏற்படுகின்றது. உடனடியாகக்கட்டுப்போடப்படுகின்றது. எனினும் வயிற்றறையினுள் இரத்தம் பெருகுவதை விளங்கக்கூடியதாக உள்ளது. இங்கு இரத்தப்பெருக்கை நிறுத்துவது சாத்தியமற்றது. திரவஊடக மாற்றீடு செய்தலே சாத்தியமானது. உடனடியாக தளபதிக்கு 'வென்புலோன்" போட்டு திரவ ஊடகத்தை ஏற்றுகின்றாள் இசையரசி. தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் ஆபத்தானவை அடுத்த களமருத்துவ நிலைக்கு மாற்றும்வரை உயிரைத் தக்கவைக்கவேண்டும். தளபதியைத் தோழில் தூக்கிக் கொண்டு வேகமாகப் பின்வாங்குகின்றாள். காயப்பட்டவள் வலியில் கத்துவதையும் பொருட்படுத்தாமல் இசையரசி வேகமாக ஓடுகிறாள். அப்பொழுது எறிகணைச்சிதறல் ஒன்று இசையரசி நெஞ்சைத்துளைத்துச்செல்கிறது. அவள் குப்புறவிழுகின்றாள். அப்பொழுது அங்கு சமரிட்டுக்கொண்டிருந்த சில போராளிகள் வந்து இருவரையும் தூக்கிக்கொண்டு களமருத்துவ நிலைக்கு கொண்டுசெல்கின்றார்கள். இருவர் நிலையையும் களமருத்துவர் வளர்மதி பரிசோதிக்கிறார். இசையரசி வீரச்சாவடைந்துவிட்டாள். தளபதி இரத்தப்பெருக்கால் அதிர்ச்சி நிலையை எட்டிவிடப்பட்டுவிட்டாள். உடனடியாகப் பதுங்ககழியினுள் வைத்து இரத்தம் ஏற்றப்படுகின்றது. எனினும் இரத்தம் வெளியேறும் வீதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் குருதி ஏற்றவேண்டும். ஆனால் அது இங்கு சாத்தியமில்லை. இப்பகுதி எப்பவும் எதிரியால் கைப்பற்றப்படலாம். உடனடியாகப் தொண்டமனாறு நீரேரி கடந்து அடுத்த மருத்துவ நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். அங்கு கடமையில் இருக்கும் போராளி மருத்துவர் வித்தகி தளபதியைப் ;பொறுப்பேற்கின்றார். பரிசோதிக்கையில் மீண்டும் இரத்த அழுத்தம் குறைந்தது, நாடித்துடிப்புவீதம் அதிகரித்து, தோல் பிசுபிசுத்துக்காணப்படுகிறது. மீண்டும் அதிர்ச்சி நிலைக்கு உட்பட்டிருந்தார். மீண்டும் இரத்தம், திரவஊடகம், உயிர்க்காப்பு மருந்து நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்பன ஏற்றப்படுகின்றது. இதைத்தவிர அங்கு ஒன்றும் செய்ய முடியாது. வயிற்றறை வெட்டித் திறக்கப்பட்டு சேதமடைந்திருக்கும் குருதிக்கலன்கள் கட்டப்படவேண்டும். மேற்படி சிகிச்சை செய்வதாயின் பின்தளம் அனுப்பப்பட வேண்டும். அதுவரை உயிரைத்தக்க வைப்பதுதான் இவர்களது இலக்கானது. மீண்டும் உழவு இயந்திரத்தில் தளபதி ஏற்றப்படுகின்றார். எறிகணைவீச்சு, கடற்கலங்களின் பீரங்கித்தாக்குதல், கிபிர் விமானங்களின் அச்சுறுத்தல் அனைத்தையும் அலட்சியம் செய்த வண்ணம் உழவு இயந்திரம் புழுதி கிளப்பிப் புறப்படுகின்றது.

மிக சிரமத்தின் மத்தியில் கட்டைக்காட்டில் இயங்கும் பிரதான களமருத்துவநிலையை வந்தடைகின்றனர். அங்கு கடமையாற்றும் மருத்துவர் அருந்ததி தளபதியை பொறுப்பேற்று பரிசோதிக்கின்றார். மீண்டும் அவரின் உயிர் சாவின் எல்லைக்கு வந்திருந்தது. இங்குசற்று நிதானமாக மீளவுயிர்ப்பித்தல் செய்யக்கூடியதாக உள்ளது. மீண்டும் இரத்தமும் ஏற்றப்படுகின்றது. வன்னித்தளத்தில் இயங்கும் பிரதான சத்திரசிகிச்சை கூடத்திற்கு அனுப்புவதற்கு சில மணித்தியாலங்கள் எடுக்கும். முதலில் பனை மரங்கள் நிறைந்த மணற்தரைய+டாக பயணிக்க வேண்டும். பின் கண்டாவளை நீரேரி கடக்கவேண்டும் மீண்டும்; தரையில் பயணிக்க வேண்டும். சீரற்ற பாதைகளும், அடிக்கடி பழுதடையும் வாகனங்களும், போர் அபாயமும் எந்நேரமும் உயிரைப் பறிக்கலாம். குறித்த மருத்துவமனை போய்ச்சேரும்வரை குறைந்தது ஒரு மருத்துவரின் கண்காணிப்பு அவசியமானது. தொடர்ந்து இரத்த திரவம் ஊடக மாற்றீடு செய்யப்படவேண்டும் ஆனால் உடன் அனுப்புவதற்கு மருத்துவப்போராளிகள் இல்லை. அங்கு கடமையாற்றுபவர்களுக்கு வேலைப்பழு அதிகரித்த வண்ணம் உள்ளது.

உடன் மருத்துவர் ஒரு போராளியை அழைத்துச் செயன்முறை விளக்கம் கொடுக்கிறார். எவ்வாறு அடுத்தடுத்த குருதி, திரவஊடக மாற்றீடுகள் செய்வது இதயத்துடிப்பு நின்றால் என்ன செய்வது, செயற்கைச்சுவாசம் எவ்வாறு கொடுப்பது போன்றவை விளங்கப்படுத்தப்படுகின்றது. அனைத்தையும் விட முக்கியமானது பயணம் தாமதிக்கப்படக்கூடாது. வாகனமோ, படகோ பழுதாகலாம் என்பது கருத்தில் எடுக்கப்படுகின்றது. ஆதலால் இரண்டு வாகனம் இரண்டு படகு என ஒழுங்கு செய்யப்படுகிறது. அனைத்தினதும் தொலைத்தொடர்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றது. நீரேரியின் மறுமுனையில் இரண்டு வாகனமும் ஒரு மருத்துவரையும் வந்து நிற்கும்படி அவசர தகவல் அனுப்பப்படுகின்றது. கூடப்போகும் போராளிக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது. ~வோக்கித்தொடர்போட போங்கள். வழியில் வாகனமோ படகோ பழுதடைந்தால் அடுத்தது வரும். அங்கால பொறுப்பெடுக்க அவர்;கள்; நிற்பினம். அவர்களிடம் ஆள உயிரோட கொண்டு போய்ச் சேர்க்கிறது உங்களுடைய பொறுப்பு
மேற்படி காயடைந்த தளபதியை ஏற்றி பிக்கப் வாகனம் வேகமெடுத்தது.

தொடர்ந்து வரும் காயக்காரர்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவர்கள் முழ்கிவிட்;;டார்கள். காயம் நகரும் பயணம் இடைய+றின்றி நடைபெறுகிறது என்பதை இடையிடையே உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அப்பொழுது ஒரு அதிர்ச்சித்தகவல் கிடைக்கின்றது. குறித்த தள மருத்துவமனை இரவோடு இரவாக இடம்மாற்றப்பட்டு விட்டது. மறுநாள் வான்தாக்குதல் ஒன்றை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனால் காயம் பயணிக்க வேண்டிய தூரம் இருமணிகளால் அதிகரித்தது. விளைவுகளை யோசித்து கவலைப்பட போர்ப்பணி இடம் தரவில்லை. இறுதியாகக் கிடைத்த தகவல் நிம்மதியைக்கொடுத்தது. மேற்படி தளபதிக்கு வயிற்றைத்திறந்து இரத்தப் பெருக்கு நிறுத்தம் சத்திரசிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது என.

சில மாதங்கள் கடந்து விட்டிருந்தது. மேற்படி மருத்துவர்கள் கற்கைநெறியொன்றினைப் பயின்றுகொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எதிரி தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தான் இவர்களின் மருத்துவ ரீதியான பங்களிப்பு இல்லாமலேயே அச்சமர் புலிகளால் முறியடிக்கப்பட்டு விட்டது. அதில் ஈடுபட்ட போராளிகளை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசியத்தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரால் கௌரவிக்கப்பட்டவர்களில் மேற்படி தளபதியும் ஒருவராயிருந்தது இவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது நினைவுகளில் பெருமிதத்தையும் தான்.

என்னை கண்கலங்க வைத்த கதைகள்.....2

துளசிச்செல்வனின் மற்றுமொரு கதை இது...வெளியே தெரியாமல் இதைப்போல் எத்தனை ஆயிரம் கதைகள்...போராளிகளின் குறிப்புகள்...

மௌனக்குமுறல்

- துளசிச்செல்வன் -

அமைதியான பொழுது... சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரதமாய் சிவந்திருந்தது. அருள் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் ப+மிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.

அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே மௌனம் நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் மௌனமாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. சோகம் தெரிந்தது. இதுதான்... இந்த இடம்தான்... தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணியிற்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.

ஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய ஞாபகங்கள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.

அருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தேசத்தோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்தமர அடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு? இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசை களையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்... சுபேசனாக... சிற்றம்பலமாக... ஆசாவாக... உமையாளாக... இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து சுவா சிக்கக்கூட கஸ்ரப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.

இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல் அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்
ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.

கண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டிகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.

சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ
அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலி வீரர்கள் டொள்.... டொள்... என்று வாயால் சத்தம் இட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சியின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது ~சாச் காரன் மூவ்..
என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறைவேற்றப் போகின்ற கரும்புலி வீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.

இதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்;வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுது தீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.

அவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழல ஆரம்பித்தன. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க ஆரம்பித்தான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.

அந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எடுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக்குவியல்... கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்... உமையாள்... என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத்தான்.

குண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்த கற்கள். அவள் ஓடியோடி நிறைய கற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்த கற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.

தாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவான புயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் தபால்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக் குமுறல்களைப்புரிந்;து கொண்ட தலைவர் சிரித்தார். ~சந்தர்ப்பம் வரேக்குள்ள
என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

சந்தர்ப்பம் எப்ப வரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கே ஆரம்பமானது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்பதற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க முன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இப்படி அவன் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வான்.

அங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான். சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம் போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்து வைத்திருந்தனவே தவிர மாற்றவில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்ற வேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.

அவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான் மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் பிரதான பொறுப்பாளராக அருளனே நியமிக்கப்பட்டான். பயிற்சி கொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒரு கரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச்செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது.

உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சொன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடு சேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்று நோ என்று எல்லா வருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற்சிகளையும் செய்தான்.

இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்
எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். ~நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.
சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய்ப் பிரகாசிக்கும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்களில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப்பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத்தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.

அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்...
அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு கஸ்ரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தேசத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்தான்.

கொழும்பு றோயல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப்போராட்டத்திற்காய் விலை கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதையாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.

ஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.

அம்மாட்;டக் குடுங்கோ...
ஒரு கடிதம்

தங்கச்சியிட்டக் குடுங்கோ...
ஒரு நோட்புக் ஒரு அல்பம்.

அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோசமாய் இருக்கச்சொல்லுங்கோ
அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.

அது நிதன் அண்ணை தந்தது..
மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.

இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ...
ஒரு கல்லு கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.

அந்த தாக்குதல் நீண்ட காலத் தயார்ப்படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றின் உக்கிரத்திற்கு அது மிகவும் முக்கியமானது. எனவேதான் அவசர அவசரமாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்;டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலை விடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.

காலை 10.48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான விமானத்தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்த படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கியதென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.

Friday, December 18, 2009

கனவு நகரத்தின் இரவுப் பொழுது...

துபாய் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய எமிராட்டையும் (emirate), அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும். இது மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக்குளிப்புப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அன்மைக்காலமக அங்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது. அந்நகரத்தின் இரவுக்காட்சி உங்கள் பார்வைக்கு....

















என்னை கண்கலங்க வைத்த கதைகள்.....1

ஈழத்து போராளி எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் துளசிச்செல்வன். ஆவரின் படைப்பில் என்னைக் கலங்க வைத்த கதைகளில் ஒன்று இது....

பொங்கலோ பொங்கல்

-துளசிச்செல்வன்-

கம்பங்களில் சில விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. காற்றுக்கு படபடக்கும் அந்தச் சுடரகளில் கல்லறைகள் நன்றாகத் தொரிந்தன. மழை மீண்டும் வருவதற்கு ஆயத்தமாக வடக்குப்பக்கமாக இரைந்தது. அவனுக்குள் நினைவுகள் பாரமாய்க் கனத்தன. அந்தத் துயிலுமில்லத்திற்கு மட்டும் எத்தனை தோழர்கள், எவ்வளவு சகோதரிகள். பெருமூச்சு விட்டபடி நடையை விரைவுபடுத்தினான். காலையில் வந்து மாலையிட்ட முத்துவின் கல்லறை ஒரு மின்னல்க்கீற்றால் பளிச்சிட்டது. அந்த இடத்தில் கால்களில் ஆணி அறைந்தாற்போல் நின்றான்.

மாலைகள் வாடாமலே இருந்தன. உலருணவுகளை எறும்புகள் மொய்த்திருந்தன. முத்து என்ன சாப்பிடவே இல்லையா? என்று கேட்கவேண்டும் போலிருந்தது. அவனுக்காய் பரவியிருந்த எல்லா உலருணவையும் பாத்தான். சுருண்டு போன வாழையிலைக்குள் கொஞ்சம் சர்க்கரைப்பொங்கலும்... அவனுக்கு அழுகை வந்தது. முத்து கொஞ்சம் புக்கையாவது சாப்பிடன், கல்லறை முன்நிகழும் இதே கெஞ்சல் பாசறையிலும் ஒருநாள் நடந்தது.

சில வருடங்களிற்கு முன்னொரு பொங்கல் நாளில் முத்துவோடு ஒரு அணி பரந்தன் முன்னணி அரங்கில் நின்றது. பொங்கலுக்கு முதல் நாள்வரை பொங்குவதில்லை என்ற முடிவே இருந்தது. அந்த இடத்தில் அது சாத்தியமில்லை. பொழுது கருகிவிட்டது. இரவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. முத்துவுக்குள் அடக்கமுடியாத ஆசை காலம பொங்குவம். ஒவ்வொரு நாளும் வெடி கொழுத்திறம் ஒருநாளைக்காவது பொங்குவம்
என்று தொடங்கினான்.

அதுசாரி வராது கன பிரச்சனை இருக்கு ....

இல்லை மச்சான் பொங்குவம்...

பாயாசம் காய்ச்ச வேணும், பானையில அரிசியில்லை... என்று பாடித்தோழார்கள் ஆடத்தொடங்கினாhர்கள்.

சத்தம் போடவேண்டாம் செல்லடிப்பான்.
பக்கத்து காவலரணில் இருந்தவார்கள் சூழ்நிலையை விளக்கினாhர்கள். முத்து விடுவதாக இல்லை.

விடிய சார்க்கரைப்புக்கை பொங்கவேணும்.
இன்னும் பன்னிரண்டு மணிநேரத்துக்குள் தேடவேண்டியவை எவ்வளவோ. பானையிலிருந்து தண்ணிவரை எடுக்கவேண்டும். விறகிலிருந்து சார்கரை வரை தேடவேண்டும். முத்துவின் விடாதமுயற்சி ஏனையவார்களிற்குள் மறைத்துவைத்த ஆசைகளையும் வெளிக்கொணார்ந்தன. ஒவ்வொருவார் ஒவ்வொரு பொருள்களிற்காக வெவ்வேறு திசைகளிற்குப் போனார்கள்.

நள்ளிரவு கடக்கும்போது முத்து தலையில் பெரிய மூட்டையோடு வந்திருந்தான். பொங்கலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள். கிச்சின் கிழவனுக்கு ஜஸ் வைச்சு வேண்டப்பட்டபாடு.

வியார்வையிலூறிய மேற்சட்டையைக் கழட்டிவிட்டு மண்மூட்டையில் உட்கார்ந்தான்.

முத்து பானையும் எடுத்தாச்சு என்றுவிட்டு காவலரணுக்குள் பாதுகாக்கப்பட்ட அலுமினியப் பானை ஒன்றை வெளியே கொண்டு வந்தார்கள்.

தண்ணியை விடுபார்ப்பம். முத்து எழுந்து பானையைத் தூக்கினான். இன்னொருத்தன் தண்ணீரை விட்டான். ஒழுகியது. என்ன சார்க்கரைப்புக்கை சாரிவராதுபோல.... தோழார்கள் சோhர்ந்;து போனாhர்கள்.

முத்து ‘சோப் எடுத்து வா... என்றான். சில மணிநேரமும் பாதிச்சவார்க்காரமும் செலவழித்த பின் ஒழுகுவது ஓரளவு நின்றது.

எரிச்சா நின்டிடும் என்றுவிட்டு அடுப்பை மூட்டினான்.

கவனம் மறைப்பு கட்டிப்போட்டு பொங்கு பிறகு படைக்கேக்க மட்டும் சூரியனுக்குக் காட்டுவம்.

சாக்கு மறைப்பிற்குள் சூரியப்போங்கல்.... அவார்கள் பக்கத்துக் காவலரண்காரார்களிற்கும், எதிரியின் காவலார்களிற்கும் தெரியாது பொங்கவேண்டும். இயன்ற வரை மறைத்தார்கள். ஈர விறகுகள் இரகசியத்தைக் காற்றில் பறக்கவிட்டன. பக்கத்துக் காவலரணைவிட முதலில் எதிரி கண்டுவிட்டான்.

சரி இறக்கடா.... காணும்... சுற்றி நின்றவார்கள் அவசரப்படுத்தினார்கள். முத்து ரசித்து, அனுபவித்துக் கிளறிக்கொண்டிருந்தான். எறிகணைகள் குழல் வாயிலிருந்து புறப்படும் சத்தம் கேட்டன. மறுவினாடி... எங்கும் புகை... எறிகணைகளைத் தொடார்ந்து டாங்கிகளின் இரைச்சல்... துப்பாக்கிச்சூடுகள் அந்தக் காவலரண் பகுதியே சின்னாபின்னமாக்கப்பட்டது. முன்னேற்ற முயற்சி தோல்வி கண்டது. கிபிரும் வந்து குண்டு வீசிப்போனது. அது போர்க்களத்திலல்ல. அவார்களில் இருந்து வெகுதூரத்தில் உள்ள வயற்கிராமத்தில். சண்டை ஓய்ந்தபோது ஒவ்வொரு காவலரணிற்குள்ளும் எல்லோரும் உள்ளார்களா என்ற துடிப்போடு தொலைத்தொடார்பு கருவிகளும் வாய் உரையாடலும் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. பாதுகாப்பு நிலைச்சண்டை ஆகையினால் யாருக்கும் காயமோ வீரச்சாவோ ஏற்படவில்லை. முத்து எங்க... தேட ஆரம்பித்தார்கள். சண்டை நடக்கும் நேரமெல்லாம் காவலரணுக்குள் நின்றான்... இப்போது எங்கே.

'சரி சூரியனுக்குப் படைக்கப்போறன் வாறாக்கள் வா..."

வந்து கொண்டிருந்த சாப்பாட்டு உழவு இயந்திரத்தின் சத்தத்திலும் பார்க்க முத்துவின் குரல் எல்லாக் காவலரணுக்கும் ஓங்கி ஒலித்தது. சண்டை ஓயவே அவன் பொங்கல்ப்பானைக்கு கிட்ட போய்விட்டான். அத்தனை எறிகணை வீச்சிற்குள்ளும் அது தப்பியது அதிசயம்தான். கெதியா இறக்கு... கெதியாப்படை... அடுத்த தரம் அடிக்கமுதல் சாப்பிடுவம்.
முத்துவைச் சுற்றி நின்ற போராளிகள் அவசரப்படுத்தினார்கள். சாப்பாடு எடுக்கப் போனவன் சில சொப்பின்பை பொதிகள் சுமந்து வந்தான்.

டேய் உது இண்டைக்கு தேவையில்லை....

இஞ்ச திறம் புக்கை காச்சியாச்சு...

முத்து மகிழ்ச்சி பொங்கச் சொன்னான்.

கேட்டவன் அப்படியிருக்கவில்லை. அழுதான். அடக்க முடியாது விக்கிவிக்கி அழுதான். எல்லோரும் அவனைப் பார்த்தனா;. அவன் சின்ன விசயத்திற்கு அழக்கூடியவனில்லை. இறுக்கமான மனசு. இலையில் பரப்பப்பட்ட சார்க்கரைப்பொங்கலில் இருந்து ஆவிபறந்தது. வாசனை வீசியது. ஏன் அருகில் நின்றவன் சாப்பாட்டு பையுடன் வந்தவனின் தோளில் கைபோட்டுக் கேட்டான். அவனது கைகளிலிருந்த பொட்டலங்களை மண்மூட்டையில் வைத்தான். குனிந்தபடியே இப்ப கிபிர் வந்து அடிச்சதில... விழுங்கினான், விக்கினான்...?

பொங்கிக் கொண்டிருந்த ஏழெட்டுச்சனம் செத்துப் போட்டுதுகலாம்...

அவன்ர அப்பா, அம்மாவைக் கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்தநேரம் கூட இப்படி அழுதிருக்கமாட்டான். அப்ப சின்ன வயசு...

பொங்கல் பானையும் படையலும், வந்த சாப்பாட்டுப் பொதிகளும் தனிமையில் கிடந்தன. போராளிகள் காவலரணொன்றிற்குள்ளும் பதுங்குகுழிக்குள்ளும் இருந்தார்கள். நாட்குறிப்பு எழுதினார்கள். துப்பாக்கியை துப்பரவு செய்தார்கள். கலைந்த உருமறைப்பை சாரிசெய்தார்கள். சிதைந்த காவலரண்களைத் திருத்தினார்கள். ஆனால் யாரும் சாப்பிடவில்லை. அந்த சார்க்கரைப்பொங்கல் இரவு கடந்தும் அப்படியே கிடந்தது.

அதிகாலை மறுபடி சண்டை. முன்னைய நாளைவிட கடுமையான முன்னேற்ற முயற்சி - உக்கிரமான சண்டை. சண்டை ஓய்ந்தது முன்னேற்ற முயற்ச்சி தடைப்பட்டது. இப்போதும் பொங்கல் பானை அதே இடத்தில் - சார்க்கரைப்பொங்கலோடு. யாரும் சாப்பிடவில்லை. இனிச் சாப்பிடவும் பலர் இல்லை.

முத்து... இலக்கியன்... அருளன்...இந்து..!

காவு குழுக்காரார் ரத்தமோடு கிடந்த அவார்களைத் துக்கிக்கொண்டு போனார்கள். அந்தப் பொங்கல் பானையுள்ள பக்கம் செல்லாமலே பல நாட்கள் அதே காவலரண்களில் வாழவேண்டியிருந்தது. நினைவுகள் எப்படி செல்லாது இருக்கும்....

மழை தூறத்தொடங்கியது. மறுபடியும் அவன் நனையத்தொடங்கினான். முத்துவின் கல்லறைக்கு அருகோடே சிறிது நேரம் இருந்தான். மனசு பொங்கியது, கண்கள் பொங்கி - எழுந்தான். காவலரண்களில் இன்னும் அவனிற்கான பணியிருப்பதை நினைத்துக் கொண்டு நடந்தான். எப்போதாவதுவரும் நல்லதொரு சூரியப்பொங்கல்.

பி.கு. துளசிச்செல்வனுக்கு என்ன நடந்தது என்று யாருக்காது தெரியுமா...?

குளிர் காலைப்பொழுது.....

எனக்கு பிடித்த இந்த காலைக்காட்சி உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்....