Sunday, December 20, 2009

என்னை கண்கலங்க வைத்த கதைகள்.....3

மருத்துவ போராளி எழுத்தாளரான தூயவனின் கதைகள் தனி புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மருத்துவ போராளியான தனது மனைவியுடனும், பெண் குழந்தையுடனும் யாழ்ப்பானத்தில் சமாதான காலத்தில் தங்கியிருந்த தூயவனின் கதைகள் போராட்டம் பற்றிய பல நிகழ்வுகளை, உயர்ந்த இலக்கிய தரத்தில் பதிவு செய்துள்ளன.


இயற்கை விதிகள்

-தூயவன்-

குடாரப்பு மணற்பிரதேசம் சூடேறிக்கொண்டிருக்கின்றது. போர் வெம்மையுடன் ஒப்பிடுகையில் அது இதமானதாகவே இருக்கின்றது. ஆனையிறவைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயமாக மேற்கொள்ளப்பட்டதுவே இத்தரையிறக்க முற்றுகை. இதனை முறியடிக்க எதிரி மூர்க்கமாக முயன்றுகொண்டிருக்கிறான். ஆயிரத்தையெட்டியிருந்த போராளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைவடையத் தொடங்கிவிட்டது. சற்று முன்னர் எதிரி மேற்கொண்ட தாக்குதலில் சிலர் வீரச்சாவடைந்துவிட்டனர். காயமுற்றவர்கள் அவசர உயிர்காப்புச்சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்தளம் அனுப்பப்பட்டு விட்டனர். அடுத்துவரப்போகும் சமரை எதிர்பார்த்து கள மருத்துவப்போராளிகள் மீளொழுங்கினைச் செய்து முடித்திருந்தனர். பனை வடலிகளுக்கிடையில் எலிவளைகள் போல் அமைக்கப்பட்டிருக்கும் பதுங்ககழிகள் தான் அவர்களின் மருத்துவப்பாதுகாப்பிடம்.

பனைவடலி நிழலில் நீட்டிக்கொண்டிருக்கும் கருக்குமட்டைகள் வெட்டாமல் மண்மூடையொன்றில் சாவகாசமாகச் சாய்ந்திருக்கிறாள் விடுதலைப்புலிகளின் பெண் இராணுவ மருத்துவர் வளர்மதி. அருகிருக்கும் இசையரசியைப்பார்த்து சொல்கிறாள். 'மருந்துகள் கொஞ்சம்தானிருக்கு, இரத்தமும் வந்து சேரவில்லை" களைப்பைப்போக்க கண்களைமூடித்தியானம் செய்வதுபோல் மௌனமாக இருந்தவள் கண்களைத்திறந்து 'அதற்கு என்ன? என்பதுபோல் பாவனையில் கேட்கிறாள். 'அதுக்கில்ல..... இப்ப கடுமையாக யாரும் காயப்பட்டு வந்தால் என்ன செய்யிறது?" இவளது இடக்கான கேள்வியைப் புரிந்தவள் புன்முறுவலுடன் சிறிது இடைவெளிவிட்டுக் கதைக்கிறாள். 'சரி...நான் கேட்கிறதற்கு பதில் சொல்லு! அதிக ரத்தம் வெளியேறும் போது உடலின் தற்காப்பு பொறிமுறை எவ்வாறு இயங்கும்?" 'மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய அங்கங்கள் இறுதிவரை பாதுகாக்கப்படுவதற்கு ஏனைய அங்கங்களுக்கான இரத்த விநியோகம் குறைக்கப்பட்டு திசைதிருப்பப்படும்." 'அப்படித்தான் இயற்கைவிதிகள் இயக்கத்திற்கும் பொருந்தும்." என உரையாடலை முடிவிற்கு கொண்டு வருகின்றாள் வளர்மதி. 'நித்திரை கொள்ள வேண்டிய நேரத்தில் கதைக்கிறோம் போல் இருக்கிறது" எனக்கூறியவாறு மீண்டும் கண்களை மூடுகின்றாள்.

அப்பொழுது எதிரி எறிகணை ஏவும் சத்தமும் டாங்கிகள் உறுமும் சத்தமும் கேட்கத்தொடங்குகின்றது. 'மீண்டும் தொடங்கிட்டான், ஒருகை பார்க்கிறது எண்டுதான் நிக்கிறாங்கள்" கூறியபடி பதுங்ககழிகனுள் புகுந்து கொள்கிறார்கள். எறிகணைகள் சரமாரியாக இவர்கள் பகுதிகளில் வீழ்ந்து படீர் படீர் என வெடிக்கின்றது. மேலால் வந்துவிழும் எறிகனைகளும் கிடையாக வந்து தாக்கும் டாங்கியின் எரிதணல்களும் பனை மரங்களைப் பொச்சுகளாகப்பிய்த்து எறிகின்றன. காய்ந்த ஓலைகள் நிறைந்திருந்த பனைமரங்களும் சிறு பற்றைகளும் பற்றி எரிகின்றன. கடந்த சில நாட்களாக இவ்விகாரமான போர் அகோரத்திற்கு பழக்கப்பட்டிருந்தார்கள். அப்பொழுது தொலைத்தொடர்பு கருவியில் அறிவித்தல் வருகின்றது. எதிரி முன்னேற முற்படும் பகுதியில் கடமையாற்றிய களமருத்துவப்போராளி இறந்து விட்டதாகவும், இன்னொருவரை அங்கு அனுப்பும்படியும் 'களமருத்துவர்களின் எண்ணிக்கை வீதம் கைமீறிக் குறைந்துவிட்டது. எனினும் ஒன்றும் செய்யமுடியாது. உடனடியாக இசையரசி தனது களமருத்துவப்பையையும் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றாள். எறிகணைச்சிதறல்கள் படாமல் சமர் நடைபெறும் இடம் சேர்வது என்பது அவளுடைய அதிஸ்டத்துடன் தொடர்புடையது.

மகளீர் படையணியும் எதிரியும் கைகலப்பில் ஈடுபடும் தூரத்தில் துப்பாக்கிச் சமர்புரிகின்றனர். பகைவன் அடிவாங்கிப் பின்வாங்குகையில் இவர்கள்மீது எரிதணல் பொழியும். இவர்கள் அதற்கு நிலையெடுக்க எறிகனை வீச்சு இவர்களின் சுற்றயல் நோக்கி நகரும். எதிரி நேராக இவர்களுள்ள இடத்திற்குள் உட்புகமுனைவான். மீண்டும் இருபகுதியினரும் நேருக்குநேர் அடிபடுவார்கள். இறப்புக்கள் அதிகரிக்கும் மீண்டும் பின்வாங்குதல் மீண்டும் முன்னேறுதல் என நிகழ்வுகள் தொடர களமுனை எறிகணைச் சிதறல்ளாலும், வெற்றுக்கோதுகளாலும் நிறையும், காயமடைந்தவர் குரல்களால் களம் மேலும் விகாரமடையும். சமரின் உச்சக்கட்டத்தில் சமர்முனையின் மகளீர் தளபதி வயிற்றில் காயமடைந்து விழுகின்றாள். பாரிய இரத்தப்பெருக்கு ஏற்படுகின்றது. உடனடியாகக்கட்டுப்போடப்படுகின்றது. எனினும் வயிற்றறையினுள் இரத்தம் பெருகுவதை விளங்கக்கூடியதாக உள்ளது. இங்கு இரத்தப்பெருக்கை நிறுத்துவது சாத்தியமற்றது. திரவஊடக மாற்றீடு செய்தலே சாத்தியமானது. உடனடியாக தளபதிக்கு 'வென்புலோன்" போட்டு திரவ ஊடகத்தை ஏற்றுகின்றாள் இசையரசி. தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் ஆபத்தானவை அடுத்த களமருத்துவ நிலைக்கு மாற்றும்வரை உயிரைத் தக்கவைக்கவேண்டும். தளபதியைத் தோழில் தூக்கிக் கொண்டு வேகமாகப் பின்வாங்குகின்றாள். காயப்பட்டவள் வலியில் கத்துவதையும் பொருட்படுத்தாமல் இசையரசி வேகமாக ஓடுகிறாள். அப்பொழுது எறிகணைச்சிதறல் ஒன்று இசையரசி நெஞ்சைத்துளைத்துச்செல்கிறது. அவள் குப்புறவிழுகின்றாள். அப்பொழுது அங்கு சமரிட்டுக்கொண்டிருந்த சில போராளிகள் வந்து இருவரையும் தூக்கிக்கொண்டு களமருத்துவ நிலைக்கு கொண்டுசெல்கின்றார்கள். இருவர் நிலையையும் களமருத்துவர் வளர்மதி பரிசோதிக்கிறார். இசையரசி வீரச்சாவடைந்துவிட்டாள். தளபதி இரத்தப்பெருக்கால் அதிர்ச்சி நிலையை எட்டிவிடப்பட்டுவிட்டாள். உடனடியாகப் பதுங்ககழியினுள் வைத்து இரத்தம் ஏற்றப்படுகின்றது. எனினும் இரத்தம் வெளியேறும் வீதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் குருதி ஏற்றவேண்டும். ஆனால் அது இங்கு சாத்தியமில்லை. இப்பகுதி எப்பவும் எதிரியால் கைப்பற்றப்படலாம். உடனடியாகப் தொண்டமனாறு நீரேரி கடந்து அடுத்த மருத்துவ நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். அங்கு கடமையில் இருக்கும் போராளி மருத்துவர் வித்தகி தளபதியைப் ;பொறுப்பேற்கின்றார். பரிசோதிக்கையில் மீண்டும் இரத்த அழுத்தம் குறைந்தது, நாடித்துடிப்புவீதம் அதிகரித்து, தோல் பிசுபிசுத்துக்காணப்படுகிறது. மீண்டும் அதிர்ச்சி நிலைக்கு உட்பட்டிருந்தார். மீண்டும் இரத்தம், திரவஊடகம், உயிர்க்காப்பு மருந்து நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்பன ஏற்றப்படுகின்றது. இதைத்தவிர அங்கு ஒன்றும் செய்ய முடியாது. வயிற்றறை வெட்டித் திறக்கப்பட்டு சேதமடைந்திருக்கும் குருதிக்கலன்கள் கட்டப்படவேண்டும். மேற்படி சிகிச்சை செய்வதாயின் பின்தளம் அனுப்பப்பட வேண்டும். அதுவரை உயிரைத்தக்க வைப்பதுதான் இவர்களது இலக்கானது. மீண்டும் உழவு இயந்திரத்தில் தளபதி ஏற்றப்படுகின்றார். எறிகணைவீச்சு, கடற்கலங்களின் பீரங்கித்தாக்குதல், கிபிர் விமானங்களின் அச்சுறுத்தல் அனைத்தையும் அலட்சியம் செய்த வண்ணம் உழவு இயந்திரம் புழுதி கிளப்பிப் புறப்படுகின்றது.

மிக சிரமத்தின் மத்தியில் கட்டைக்காட்டில் இயங்கும் பிரதான களமருத்துவநிலையை வந்தடைகின்றனர். அங்கு கடமையாற்றும் மருத்துவர் அருந்ததி தளபதியை பொறுப்பேற்று பரிசோதிக்கின்றார். மீண்டும் அவரின் உயிர் சாவின் எல்லைக்கு வந்திருந்தது. இங்குசற்று நிதானமாக மீளவுயிர்ப்பித்தல் செய்யக்கூடியதாக உள்ளது. மீண்டும் இரத்தமும் ஏற்றப்படுகின்றது. வன்னித்தளத்தில் இயங்கும் பிரதான சத்திரசிகிச்சை கூடத்திற்கு அனுப்புவதற்கு சில மணித்தியாலங்கள் எடுக்கும். முதலில் பனை மரங்கள் நிறைந்த மணற்தரைய+டாக பயணிக்க வேண்டும். பின் கண்டாவளை நீரேரி கடக்கவேண்டும் மீண்டும்; தரையில் பயணிக்க வேண்டும். சீரற்ற பாதைகளும், அடிக்கடி பழுதடையும் வாகனங்களும், போர் அபாயமும் எந்நேரமும் உயிரைப் பறிக்கலாம். குறித்த மருத்துவமனை போய்ச்சேரும்வரை குறைந்தது ஒரு மருத்துவரின் கண்காணிப்பு அவசியமானது. தொடர்ந்து இரத்த திரவம் ஊடக மாற்றீடு செய்யப்படவேண்டும் ஆனால் உடன் அனுப்புவதற்கு மருத்துவப்போராளிகள் இல்லை. அங்கு கடமையாற்றுபவர்களுக்கு வேலைப்பழு அதிகரித்த வண்ணம் உள்ளது.

உடன் மருத்துவர் ஒரு போராளியை அழைத்துச் செயன்முறை விளக்கம் கொடுக்கிறார். எவ்வாறு அடுத்தடுத்த குருதி, திரவஊடக மாற்றீடுகள் செய்வது இதயத்துடிப்பு நின்றால் என்ன செய்வது, செயற்கைச்சுவாசம் எவ்வாறு கொடுப்பது போன்றவை விளங்கப்படுத்தப்படுகின்றது. அனைத்தையும் விட முக்கியமானது பயணம் தாமதிக்கப்படக்கூடாது. வாகனமோ, படகோ பழுதாகலாம் என்பது கருத்தில் எடுக்கப்படுகின்றது. ஆதலால் இரண்டு வாகனம் இரண்டு படகு என ஒழுங்கு செய்யப்படுகிறது. அனைத்தினதும் தொலைத்தொடர்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றது. நீரேரியின் மறுமுனையில் இரண்டு வாகனமும் ஒரு மருத்துவரையும் வந்து நிற்கும்படி அவசர தகவல் அனுப்பப்படுகின்றது. கூடப்போகும் போராளிக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது. ~வோக்கித்தொடர்போட போங்கள். வழியில் வாகனமோ படகோ பழுதடைந்தால் அடுத்தது வரும். அங்கால பொறுப்பெடுக்க அவர்;கள்; நிற்பினம். அவர்களிடம் ஆள உயிரோட கொண்டு போய்ச் சேர்க்கிறது உங்களுடைய பொறுப்பு
மேற்படி காயடைந்த தளபதியை ஏற்றி பிக்கப் வாகனம் வேகமெடுத்தது.

தொடர்ந்து வரும் காயக்காரர்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவர்கள் முழ்கிவிட்;;டார்கள். காயம் நகரும் பயணம் இடைய+றின்றி நடைபெறுகிறது என்பதை இடையிடையே உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அப்பொழுது ஒரு அதிர்ச்சித்தகவல் கிடைக்கின்றது. குறித்த தள மருத்துவமனை இரவோடு இரவாக இடம்மாற்றப்பட்டு விட்டது. மறுநாள் வான்தாக்குதல் ஒன்றை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனால் காயம் பயணிக்க வேண்டிய தூரம் இருமணிகளால் அதிகரித்தது. விளைவுகளை யோசித்து கவலைப்பட போர்ப்பணி இடம் தரவில்லை. இறுதியாகக் கிடைத்த தகவல் நிம்மதியைக்கொடுத்தது. மேற்படி தளபதிக்கு வயிற்றைத்திறந்து இரத்தப் பெருக்கு நிறுத்தம் சத்திரசிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது என.

சில மாதங்கள் கடந்து விட்டிருந்தது. மேற்படி மருத்துவர்கள் கற்கைநெறியொன்றினைப் பயின்றுகொண்டிருக்கிறார்கள். அப்பொழுது எதிரி தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தான் இவர்களின் மருத்துவ ரீதியான பங்களிப்பு இல்லாமலேயே அச்சமர் புலிகளால் முறியடிக்கப்பட்டு விட்டது. அதில் ஈடுபட்ட போராளிகளை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசியத்தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரால் கௌரவிக்கப்பட்டவர்களில் மேற்படி தளபதியும் ஒருவராயிருந்தது இவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது நினைவுகளில் பெருமிதத்தையும் தான்.

0 comments: